02 செப்டம்பர் 2018, ஞாயிறு அன்று நமது அறக்கட்டளையும், திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய சித்த மருத்துவ தொடர்கல்வி பயிற்சி முகாமில் பயிற்றுவித்து உரையாற்றிய நமது ஆஸ்தான சிறப்பு சித்த மருத்துவ நிபுணர் மரு. கு. சிவராமன் அவர்கள் இந்த நிகழ்வை பற்றி எழுதிய எழுத்துக்களின் கோர்வையை இங்கே பகிர்ந்து அளிக்கிறோம்.
1987- 92 இல் பயின்ற சித்த மருத்துவப் பட்டதாரிகளின் கூட்டமைப்பு SEED. கடந்த மூன்றாண்டுகளில், நண்பன் மருத்துவர். பொன்னம்பலம் தலைமையில் பல்வேறு சித்த மருத்துவப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்றது.
உணவுத்திருவிழா, சூழல் விழிப்புணர்வு, புற்று நோய் தடுப்பு, ஓகக் கலை பயிற்சி, மருத்துவப் பணி, மருத்துவ முகாம், மாணவர் பயிற்சிப்பட்டறை என விரிந்து கொண்டே செல்லும் பணியில் நேற்றைய (02-9-2018) சித்த மருத்துவ தொடர்கல்வி பயிற்சி வகுப்பு மாபெரும் மைல்கல்லாய் அமைந்து போனது..
தம்பி மரு.விக்ரம்குமார், உளவியல் பார்வைகளைச் செம்மையான மருத்துவ விளக்கங்களுடனும் தனக்கே உரிய நகைச்சுவையும் கருத்தாழமும் ஒருசேர, அறிவியல் தரவுகளுடன் பகிர்ந்து துவக்கியது, அட்டகாசமான விராட்கோலி துவக்கம். அதன் பின் களமிறங்கிய சித்த மருத்துவ நாடறிந்த நாயகன் ஸ்ரீராம் கைதட்டலுடன் களமிறங்கி, வியக்க வியக்க பாரம்பரிய மரபுத் தரவுகளை குழந்தை நல துறையில் கொட்டித்தீர்த்தார்..என்னே உழைப்பு!, "இவரே ஆசிரியன்" என விழிகள் விரிய அவரின் பரிமாறல் மூளைக்குள் பரவசத்தை தந்தன..அவர் பேசி முடித்ததும், நம் SEED சகா, மரு. G. ராஜாசங்கர் சொன்னது போல 'நானும் எம்டி சித்தா பீடியாட்ரிக்ஸ்' படிக்கலாம் என தோணிற்று.
அடுத்து, நம்ம நண்பன் மரு. D. ராஜா சங்கரின் விளாசல் பேச்சு..அட! என்ன அனுபவம், என்ன அறிவியல் நுட்பம், எவ்வளவு நேர்த்தியான புரிதல்..ஒரு ஒரு சின்ன முட நீக்கியல் நுட்பங்களையும் அறிவியல் சூச்சுமங்களுடன், அலாதியாய், புன்னகையுடனும், சிரிப்புடனும் அவர் விளக்கியது மாணவர்க்கும், அங்கே வந்திருந்த மருத்துவர்க்கும் வரப்பிரசாதம்..மருத்துவமனை வைத்திருக்கும் ஒவ்வொருவரும் அவரிடம், சில நாள் பயிற்சிக்கு செல்ல வேண்டியது மிக மிக அவசியம்..முதன்முறையாய் ராஜாசங்கரின் பேச்சைக் கேட்கிறேன்.பிரமிக்க வைத்துவிட்டாய் நண்பா!.நீ கற்றுக்கொடுக்க வேண்டியவை ஏராளம்..நம் குழந்தைகளோடு, நாங்களும் காத்திருக்கின்றோம்.
அடுத்து தோழன் மருத்துவர். சங்கர். வழக்கமான புன்னகையுடன் ஆழமான, மிக நுணுக்கமான மகப்பேறு மருத்துவ விஷயங்களை Dr falcon ஐயும் தேரனையும் ஒரே புள்ளியில் இணைத்து, நம் சகாக்களுக்கு "ஓ இவ்வளவு விஷயம் இருக்கா இதில்?" என விழிகள் விரித்து வைக்க ,அறிவியலை மூளைக்குள் பரிமாறியது அசத்தல். அவர் நீண்ட அனுபவங்களையும், நுட்பமான புரிதலையும் அடுத்த தலைமுறைக்கு தெளிவாய் விளக்கியதில் புதிய உயிர் நிச்சயம் பிறந்தது.
கடந்த 10 ஆண்டுகள் , சில களங்களில் ஆவேசமான விமரிசனமும், இலக்கியக்களங்களில் மேடைப்பேச்சும் பேசி லயித்தும் நகர்ந்திருக்கின்றன..ஆனால், நேற்று எனக்கு முற்றிலும் வேறுபட்ட நிகழ்வு..மகிழ்வு. ஒரு மணி நேரமாய், தன் வீட்டுப் பிள்ளைகளோடு, முற்றத்தில் கால் நீட்டி தகப்பானாய் பேசிய உணர்வு. "நான் இந்த முற்றத்தில் இருந்து வந்து, வீதியில் விமரிசையாய் வாழ்ந்துவிட்டேன்.இனி நீங்களெல்லாம் இன்னும் மகிழ்வோடு, விமரிசையாய்,இன்னும் அர்த்தமுள்ளதாய் வாழவேண்டும்" என பேசி நகர்ந்தது மறக்க முடியாத தருணங்கள். உணவு அரசியலில்லாமல், உடம்பு அறிவியலை சித்தர் அறிவியலை நவீனம் தொட்டு, அறிவியல் ஊற்றி அள்ளிக் கொடுத்ததில் எனக்கு அகமுட்ட மகிழ்ச்சி..SEED சத்தமில்லாமல் பெரும் மாற்றத்துக்கு வித்திடுகின்றது என்பது கூட்டம் முடிந்த மாலை 5.35 மணிக்கும், 'அவ்வளவு தான் சான்றிதழ் வாங்க கீழ வாங்க" ,என சொல்லும் வரை 360பேரும் அச்சுப்பிசகாமல், கலையாமல் அமர்ந்திருந்ததே சாட்சி..
1987 -92 சகாக்களே! நம் பணி இன்னும் வலுவாய், மகிழ்வாய் செய்ய நிறைய உள்ளது...கைகோர்த்து ஓடலாம்..நம் பிள்ளைகளுக்காக.. மருத்துவர்கள் பொன்னம்பலம், வனிதா, சங்கர்,சுல்பியில் இருந்து ....நம் சீட் கண்ணன் வரை நம் சகாக்களின் அயராத உழைப்பிற்கு வணக்கங்களும் நன்றிகளும்!
நேற்றைய நிகழ்வு SEED இன் வரலாற்று ஆவணம். மார்க்ஸின் "தாஸ் காப்பிட்டல்- மூலதனம்" போல, கலைஞரின் "மாணவ நேசன்" போல, காந்தியின் "தென்னாப்பிரிக்கா இரயில் நிலைய அனுபவம்" போல, .பெருந்துவக்கம்!..அறமும் அறிவியலும் அனுபவமும் ஒருசேரப் பயின்று சமூகம் நோக்கி நகர்வோம்!